Sunday, March 10, 2013

உலக சினிமா-Amour (2012)


Amour (2012) - காதலை சொல்லும் உலக சினிமா

Amour (2012) - இந்த வருடத்தின் ஆஸ்கார் வருது வழங்கும் விழாவில் பிற மொழி படங்களுக்கான பிரிவில் சிறந்த படமாக தேர்வு செய்ய பட்ட படம். விருது அறிவிக்கப்பட்டவுடன் படத்தை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து சென்ற வாரம் பார்த்து முடித்தேன். உலக சினிமா என்றால் என்னவென்று அறிய விரும்புவர்கள் இந்த படத்தை கண்டிப்பாய் பார்க்கலாம். படத்தை பற்றி விகடன் தளத்தில் அற்புதமாய் எழுதி இருந்தார்கள். அவர்களது விமர்சனத்தை இங்கு பகிர்கிறேன்.
'அமோர்' என்கிற பிரெஞ்ச் வார்த்தைக்கு காதல் (LOVE) என்று அர்த்தம். மரத்தைச் சுற்றியோ, அல்லது பனிபடர்ந்த மலை உச்சியிலோ ஆடிப்பாடும் காதலர்களை முக்கிய பாத்திரமாகக் கொண்ட வழக்கமான காதல் படம் இல்லை இது. ஒரு வீட்டினுள் அடைந்து கிடக்கிற 80 வயது முதிய தம்பதியினரின் காதலை பார்வையாளன் கண்ணில் நீர் வரவரச் சொல்லியிருக்கிற படம்தான் இந்த அமோர்.
ஒரு மனிதன் தன் வாழ்வில் எத்தனையோ காதல்களைக் கடந்து செல்கிறான். சிறு வயதில் தன் உலகமாயிருக்கும் தாயின் மீது தோன்றும் காதல், கண்டிப்பானவர் என்கிற வெறுப்பினூடேயும் தன் தந்தையின் மீதுள்ள காதல், பள்ளிப் பருவத்தில் உடன் பயிலும் சக மாணவியின் மீது வரும் காதல், இளம் பருவத்தில் கண்ணில் படும் அழகழகான பெண்கள் அத்தனை பேர் மீதும் பார்த்ததும் அரும்பும் காதல், திருமணத்திற்குப் பின் நம் அனைத்து கனவுகளையும் அடித்து நொறுக்கி விட்டு வந்து வாய்த்திருப்பவள் மீது வேறு வழியின்றி முகிழ்க்கும் காதல், பிறகு பிள்ளைகள் மீதும் அப்புறம் அந்தப் பிள்ளைகளின் பிள்ளைகள் மீதும். இப்படி காதல் நம் வாழ்வின் ஒரு சுழற்சியாகவே இருக்கிறது.

தற்காலத்தில் முகம் பார்க்கா இணையதள சாட் காதல், ஃபோட்டோ பார்த்தே வரும் முகநூல் காதல் என்று உலகமயமாக்கலுக்கு ஏற்ப காதலும் தன்னை தகவமைத்துக் கொண்டுவிட்டது. நம் வாழ்வின் சம அங்கமான ஒருவர் மரணப்படுக்கையில் தன் வாழ்வின் இறுதி நொடிகளை எண்ணிக்கொண்டிருக்க, அவர்மீது நாம் காட்டும் அளவற்ற கருணையும், அக்கறையும் காதல் என்கிற வார்த்தைக்கு இன்னும் அழகையும் இளமையும் சேர்த்துவிடுகிற அற்புதத்தை Michael Haneke-வின் 'அமோர்' சாதித்திருக்கிறது.

சமகால முக்கிய திரைப்பட இயக்குனர்களில் Michael Haneke-வின் இடம் தனித்துவமானது. இன்றுவரை இருண்ட மற்றும் மனதைப் பிசையக்கூடிய கதை சொல்லலுக்குப் பெயர் போனவர் இவர்.'The Seventh Continent’ 1989ல் இவர் இயக்கத்தில் வெளியான முதல் படம். 2001ல் வெளியான இவருடைய 'The piano Teacher’உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படம். தன்னைவிட வயதில் குறைந்த தனது மாணவன் மீது ஒரு பியானோ டீச்சர் கொண்ட காதலையும் அதன் வலியையும் பதிவு செய்த அப்படம், அந்த வருட கேன்ஸ் திரைப்பட விழாவில் மதிப்புமிக்க கிராண்ட் விருதைப் பெற்றது. தொடர்ந்து உலகப் புகழ் பெற்ற படமான 'Blue’ வில் நாயகியாக நடித்த Juliet Binoche-வை வைத்து இவர் இயக்கிய படம் 'Cache' கேன்ஸ் திரைப்பட விழாவில் இவருக்கு மீண்டும் சிறந்த இயக்குனர் விருதைப் பெற்று தந்தது. 

2009ல் இவர் இயக்கத்தில் வெளியான படம் 'The White Ribbon'. முதலாம் உலக யுத்தத்திற்கு முன் ஜெர்மனியில் கதை நிகழ்கிறது. ஒரு ஜெர்மனி கிராமத்தில் தொடர்ந்து நடைபெறும் மர்மமான சம்பவங்களும், அக்கிராமத்தில் ஒழுக்கத்தின் பேரால் கண்டிப்புடன் வளர்க்கப்படும் சிறுவர்களும் என இருவேறு தளங்களில் கதை நகர்கிறது. அக்கிராமத்தின் ஒரு பள்ளி ஆசிரியரின் நினைவுகளாய் பயணிக்கும் இந்த கறுப்பு வெள்ளைப் படம் அந்த வருட கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான தங்க பனைமர விருதைப் பெற்றது.

இந்த வருடம் 'அமோர்' திரைப்பபடத்திற்காக இவ்விருதை ஹனக்கே மீண்டும் பெற்றிருப்பன் மூலம் இவ்விருதை மும்முறை வென்ற பிரான்சிஸ் ஃபோர்ட் கப்போலா உள்ளிட்ட இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் Michael Haneke .

பாரிஸில் நிகழ்கிறது இக்கதை. ஒரு வீடு தாழிடப்பட்டிருக்க வெளியிலிருந்து அதை உடைக்கும் சத்தம் கேட்கிறது. சிறிது போராட்டத்திற்குப் பிறகு கதவு உடைக்கப்பட தீயணைப்ப்பு வீரர்கள் "யாராவது இருக்கிறீர்களா?" என்று கேட்டுக்கொண்டே வீட்டைச் சுற்றி தேடுகிறார்கள். முடிவில் டேப்பினால் அடைக்கப்ப்பட்டிருக்கும் ஒரு அறையைத் திறக்க அதனுள்ளே மலர்கள் தூவிய படுக்கையில் ஆனா ( Anna )படுத்துக் கொண்டிருக்கிறாள் பிணமாக.

ஆனாவின் கணவர் ஜார்ஜ். இருவரும் எண்பதுகளில் இருக்கும் ஓய்வு பெற்ற இசைக் கலைஞர்கள். தங்கள் முன்னாள் மாணவன் ஒருவனின் இசை நிகழ்ச்சியை ரசித்துப் பாராட்டிவிட்டு வீடு திரும்புகின்றனர். அடுத்த நாள் காலை இருவரும் உணவருந்தும்போது ஆனா செயலற்று சிலை போலாகி விடுகிறாள். முதலில் ஜார்ஜ் ஆனா விளையாடுவதாகத்தான் நினைத்துக் கொள்கிறார். ஆனால் பிறகுதான் அவருக்கு விபரீதம் உறைக்கிறது. உடனடியாக ஆனாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்.

மருத்துவமனையில் ஆனாவுக்கு இதய அடைப்பை நீக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவளுக்குச் செய்யப்படும் சிகிச்சை தவறாக முடிய, பக்கவாதம் ஏற்பட்டு உடலின் எந்த ஒரு பாகத்தையும் அசைக்க முடியாத மோசமான நிலைக்குத் தள்ளப்படுகிறாள் ஆனா.

ஒரு வீல்சேரில் அடைக்கலமாகிறாள் ஆனா. அவளுக்காக வீட்டில் பல மாற்றங்கள் செய்கிறார் ஜார்ஜ். கீழ் வீட்டினரும் அவருக்கு பல உதவிகள் செய்கின்றனர். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வரும் ஆனா தன்னை மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லக் கூடாதென ஜார்ஜிடம் வேண்டிக்கொள்ள அதற்கு அவரும் அதற்கு சம்மதிக்கிறார்.

நாட்கள் நகர்கின்றன. சிறு அசைவிற்கும் தன் கணவனின் உதவியை நாட வேண்டிய நிலை ஆனாவுக்கு. ஜார்ஜ் மனம் கோணாமல் அனைத்துப் பணிவிடைகளையும் செய்து ஆனாவை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்கிறார். நோய் தீவிரமடைய ஆனாவின் நிலைமை மேலும் மோசமாகிறது. ஆனா தன் மீதே வெறுப்பு கொண்டு பல நேரம் சிறு குழந்தை போல் நடந்து கொள்கிறாள்.

ஆனாவின் மகள் தன் தாய் கஷ்டப்படுவது கண்டு மனம் பொறுக்காமல் ஆனாவை ஓய்வு இல்லமொன்றில் சேர்த்து விடலாம் என்று யோசனை சொல்ல ஜார்ஜ் அதைத் திட்டவட்டமாக மறுத்து விடுகிறார். 'இத்தனை ஆண்டுக்காலம் என்னை அன்போடு பராமரித்தவள் அவள். அவளைப் பார்த்துக்கொள்ள எனக்குத் தெரியும்'. என்கிறார்.

ஆனாவைக் கவனித்துகொள்ள இரண்டு வேலையாட்களை நியமிக்கிறார் ஜர்ர்ஜ். ஆனாவுக்கு அதிலே இஷ்டமில்லை. ஒருநாள் அவர்களின் முன்னாள் மாணவன் அவர்களைக் காண வருகிறான். ஜார்ஜ் ஆனாவை வீல் சேரில் வைத்து அழைத்தது வருகிறார். ஆனாவின் நிலை கண்டு மனம் வருந்துகிறான் வந்தவன். ஆனாவின் ஆசைக்கிணங்க அவளுக்குப் பிடித்த இசைத் தொகுப்பை அவளுக்காக வாசிக்கிறான்.

ஆனாவின் பணியாள் ஒருநாள் பொறுப்பின்றியும் இரக்கமின்றியும் ஆனாவிடம் நடந்துகொள்ள, ஜார்ஜ் அவளை வேலையைவிட்டு நிறுத்தி விடுகிறார். ஒருகட்டத்தில் ஆனா பேசும் சக்தியை முற்றிலுமாக இழந்துவிட, ஜார்ஜ் தினமும் இரவில் பேச வைக்கும் தெரபி என்று தன்னுடன் சேர்ந்து அவளை ரைம்ஸ் பாட வைக்கிறார். 

ஓர் இரவு ஜார்ஜ் ஆனாவுக்கு உணவு ஊட்டிவிட, ஆனா சிறுபிள்ளை போல் சாப்பிட மறுத்து அடம்பிடிக்க ஜார்ஜ் தன்னை மறந்தவராய் கோபத்தில் அவளை அடித்துவிடுகிறார். பிறகு அதற்காக வருத்தப்பட்டு ஆனாவிடம் மன்னிப்புக் கேட்கிறார்.

ஒருநாள் ஆனாவின் மகள் வீட்டிற்கு வரப் போவதாக கடிதம் வர.. ஆனா தன் மகள் அங்கு வருவதை விரும்பவில்லை என்கிறாள். அதையும் மீறி மகள் வந்துவிட, ஜார்ஜ் ஆனாவின் அறையைத் தாளிட்டு மகளிடம் ஆனா உன்னைக் காணத் தயாராயில்லை என்கிறார். ஆனால் மகளோ தன் அம்மாவைப் பார்த்தே தீருவேன் என்று அடம்பிடிக்க வேறு வழியின்றி ஜார்ஜ் கதவைத் திறந்துவிட கட்டிலில் உறங்கிக் கொண்டிருக்கும் ஆனாவை அவள் மகள் நெருங்கித் தொட முயல அப்போது விழித்துக்கொள்ளும் ஆனா பேச இயலாமல் கத்திக் கூப்பாடு போட்டு மகளைப் பார்க்க மறுத்து அங்கிருந்து அவளை வெளியேறச் சொல்கிறாள். ஜார்ஜ் தன் மகளிடம் " நீ உன் வாழ்க்கையைப் பாரும்மா; நாங்கள் எங்களுடைய வாழ்க்கையைப் பார்த்துக்கறோம்" என்று சமாதானம் சொல்லி அனுப்பி வைக்கிறார்.

அன்றிரவு ஜார்ஜ் பல் துலக்கிக்கொண்டிருக்க, கட்டிலில் படுத்திருக்கும் ஆனா நோயின் உச்சத்தில் வலி பொறுக்க மாட்டாதவளாய் வேதனையில் கத்துகிறாள். ஜார்ஜ் அவளுக்கு அருகில் அமர்ந்து ஆறுதலாய் வருடிக் கொடுக்கிறார். வலி தெரியாமலிருக்க தன் சிறு வயதுக் கதைகளை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனா கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாக, முடிவில் ஜார்ஜ் அருகிலிருக்கும் தலையணையை எடுத்து ஆனாவின் முகத்தில் பொத்தி அழுத்தி ஆனாவுக்கு அவளுடைய நோயின் வேதனையிலிருந்தும் இந்த உலகிலிருந்தும் நிரந்தர விடை கொடுத்து அனுப்பி வைக்கிறார். 

மறுநாள் ஜார்ஜ் கண்விழிக்க, ஆனாவின் குரல். சென்று பார்க்க ஆனா வெளியே கிளம்பிக் கொண்டிருக்கிறாள். ஜார்ஜ் அவளுக்கு கோட் அணிய உதவி செய்து அவளுடனே சேர்ந்து அவரும் கிளம்பி வீட்டை விட்டு வெளியேறிச் செல்கிறார்.

மிகக் குறைவான கதாபாத்திரங்களைக் கொண்டு ஒரே வீட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது இப்படம். ஆனா மற்றும் ஜார்ஜாக நடித்த EMMANUEL RIVA , JEAN-LOUIS TRINTIGNANT இருவரின் நடிப்பு என்றும் மறக்க முடியாதது. ஜார்ஜாக நடித்த JEAN-LOUIS TRINTIGNANT பல முன்னணிப் படங்களில் நடித்தவர். COSTA GRAVAS என்னும் இயக்குனரின் ' Z ' படத்திற்காக கேன்ஸில் சிறந்த நடிகருக்கான விருதை வென்றவர்.

'அமோர்' தன் குடும்பத்தில் நடந்த உண்மைக் கதை என்கிற Haneke-விற்கு 'ஜார்ஜ்' மற்றும் 'ஆனா' என்கிற பெயர்களின் மீது ஏனோ அப்படி ஒரு காதல். தன்னுடைய எட்டுப் படங்களின் முதன்மைக் கதாபாத்திரங்களுக்குமே அவர் ஜார்ஜ், ஆனா என்றுதான் பெயர் வைத்திருக்கிறார்.


City of God-(2002)-கேங்ஸ் ஆப் பிரேசில்

ஒரு நாட்டின் கலாச்சாரத்தை அறிந்து கொள்ள ரெண்டு வழிகள் உள்ளன, ஒன்று நீங்கள் அந்த நாட்டிற்கு பயணம் செய்து அந்த நாட்டின் கலாச்சாரத்தை, வாழ்க்கைமுறையை அறிந்து கொள்ளலாம், அல்லது நீங்கள் அந்த நாட்டின் திரைப்படங்களை பார்க்கலாம் - யாரோ சொன்னது !!!!!
     
திரைபடங்கள் நமக்கு என்ன வாழ்க்கைமுறையை கற்று தர போகின்றது என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் பார்க்க வேண்டிய படம் "City of God-(2002)" a.k.a: Cidade de Deus. உங்கள் சந்தேகம் போயே போய் விடும். பிரேசில் என்றால் நமக்கு உடனே ஞாபகம் வருவது மஞ்சள் நிற ஜெர்சி அணிந்த புட் பால் விளையாட்டு வீரர்கள், சம்பா நடனம் மற்றும் பெரிய ஜீசஸ் சிலை தான். அந்த நாட்டு மக்களின் வாழ்க்கைமுறையை நாம் அறிந்திருக்க வாய்ப்பு ரொம்பவே குறைவு. இந்த படம் முலமாக நீங்கள் பிரேசில் நாட்டின் ஒரு பகுதி மக்களின் வாழ்க்கைமுறையை அறிந்து கொள்ள முடியும்.எனக்கு பிரேசில் என்றால் இனி மேல் இந்த படமும் ஞாபகம் வரும்.
City of God பிரேசில் நாட்டின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோ அருகில் உள்ள ஒரு சேரி பகுதி. அந்த பகுதியில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தின் தொகுப்பே இப்படம். அந்த சேரியில் நிறைந்து இருப்பது வன்முறை மற்றும் அதீத வன்முறை மட்டுமே. அது மட்டும் அல்லாது போதை மருந்து கும்பல், அவர்கள் செய்யும் கொலை, கொள்ளை என்று அந்த சேரியே வாழ தகுதியற்ற இடமாக மாறி கொண்டு வருகிறது. இந்த மாதிரி அசாதாரணமான சூழ்நிலையில் அந்த சேரியில் பின்புலத்தில் இருந்து வந்து, சிறந்த போட்டோக்ராப்பர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கும் ராக்கெட் (Rocket) என்ற இளைஞன் தனக்கும் City of God-க்கு இருக்கும் பந்தத்தை நமக்கு விவரிக்கும் கதையே இந்த படம். சும்மா சொல்ல கூடாது, இந்த படத்துல யாரும் நடிச்ச மாதிரி எனக்கு தெரியவில்லை, எல்லாம் அந்த அந்த கதாபாத்திரமாக வாழ்ந்து இருப்பார்கள்
படத்தில் முதல் காட்சியில் City of God நகரின் மைய பகுதியில் ஒரு தாதா கேங், தங்கள் மதிய உணவிற்கு சிக்கன் சமைத்து கொண்டு இருப்பார்கள். அங்கு நிற்கும் ஒரு கோழி மரண பயத்துடன் மற்ற கோழிகள் சிக்கன் ஆவதை பார்த்து கொண்டு இருக்கும். பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா என்று, தன் கட்டை தானே அவிழ்த்து கொண்டு தப்பித்து ஓடும். நம்ப ஊருல ஹீரோயின் கோழி தப்பிச்சி போச்சுனா அதை பிடிச்சு தர நம்ப ஹீரோ இருப்பாரு. கோழி பிடிக்கிற சாக்குல அவரு ஹீரோயின பிடிப்பாரு !! காதல் வரும், இது சராசரி சினிமா.. ஆனா நம்ப பார்கிறது உலக சினிமா. இங்க தப்பிச்ச கோழிய பிடிக்க அந்த தாதா கும்பலின் மொத்த பேரும் துப்பாக்கிய தூக்கிகிட்டு ஓடுவாங்க. சும்மா கிடையாதுங்க சுட்டுகிட்டே ஓடுவாங்க. எல்லாம் பத்து வயசுல இருந்து இருபது வயசுக்குள்ள தான் அந்த தாதா கேங் ஆளுங்க இருப்பாங்க. ஓடுற கோழி படத்தோட கதைசொல்லி ராக்கெட் பாகத்துல வந்து நிக்கும். அந்த கும்பலின் தலைவன் பேரு லில்' ஜே (Lil' Ze), வெறும் இருபது வயசு தான் இருக்கும். ஜே மற்றும் ராக்கெட் சின்ன வயசுல இருந்தே நண்பர்கள். ஜே ராக்கெட்கிட்ட அந்த கோழிய பிடிக்க சொல்லுவாரு. ராக்கெட் கோழி பிடிக்க ரெடி ஆவான். கரெக்டா அந்த நேரம் பார்த்து மொத்த போலீஸ் குரூப் தாதா லில்' ஜே கும்பலை உயிரோடு அல்லது பிணமாக பிடிக்க அன்புச்செல்வன் IPS மாதிரி விறப்பா வந்து சேருவாங்க. இந்த பக்கம் போலீஸ் படை, அந்த பக்கம் லில்' ஜே படை, நடுவுல ராக்கெட் & கோழி. இங்க இருந்து பிளாஷ்பேக்....... ராக்கெட் தன்னோட கடந்த காலத்தை பற்றியும் லில்' ஜேவை பற்றியும் மற்றும் அந்த சேரியில் வாழ்ந்த அனைவரை பற்றியும் நமக்கு கதை சொல்லுவார்.
ROCKET
கதை முதலில் 60's பயணம் செய்யும். இங்கு நாம் City of God-யின் ஆரம்ப நாட்களை பார்போம். ராக்கெட் மற்றும் லில்' ஜே சிறுவனாக இருப்பார்கள். லில்' ஜேவின் மற்றும் ஒரு நண்பனின் பெயர் பென்னி(Benny). அங்கு டெண்டர் ட்ரையோ (Tender Trio) என்ற முன்று பேர் கொண்ட கேங் சிறு, சிறு கொள்ளைகள் செய்து கொண்டு இருப்பார்கள். டெண்டர் ட்ரையோ கேங்கில் எப்படியாவது தங்களையும் சேர்த்து கொள்ள சிறுவர்கள் லில்' ஜே & பென்னி அந்த முன்று பேரை கெஞ்சி கொண்டு இருப்பார்கள். இப்படியாக 60's கதை பயணம் செய்யும். கதை முடிவில் ட்ரையோ கேங் மெம்பர்ஸ் யாரும் உயிரோடு இருக்க மாட்டார்கள்.
அடுத்து கதை 70's-க்கு நகரும். அங்கு ராக்கெட் பள்ளிக்கு செல்லும் வாலிபனாக வளர்ந்து இருப்பான். லில்' ஜே மற்றும் பென்னி அந்த நகரத்தில் பெரிய போதை மருந்து டீல்ர்ஸ் ஆக வளர்ந்து இருப்பார்கள். தங்கள் பாதையில் யார் வந்தாலும் போட்டு தள்ளிட்டு போய் கொண்டே இருப்பார்கள். அவர்களின் பிரதான எதிரி கேங் கேரட்(Carrot). பென்னி அனைவரையும் அனுசரித்து செல்லும் பொறுமைசாலி, லில்' ஜே அவனுக்கு நேர் எதிர். பொறுமை என்பதே கிடையாது. அனைவரிடமும் சண்டை போடும் கேரக்டர். ஒரு டான்ஸ் பார்ட்டியில் கேரடின் ஆள் தவறுதலாக லில்' ஜேவை சுடுவதற்கு பதில் பென்னியை சுட்டு கொன்று விடுவான். அதை பார்த்த லில்' ஜே வெறி கொண்டு, தன் நண்பனை கொன்ற கேரட் கேங்யை பழி வாங்க புறப்பட்டு விடுவான். இங்கு இருந்து கேங் வார் ஆரம்பிக்கும். இங்கு இருந்து 80's ஆரம்பிக்கும்.
இந்த கேங் வாரின் இறுதி தான் நாம் பார்த்த முதல் காட்சி.......

Children Shooting
படத்தில் சுவாரிசியங்கள் சில:

  • படம் நான்-லீனியர் பாணியில் சொல்ல பட்டு இருக்கும். ஆனால் நமக்கு குழப்பம் இல்லாமல் திரைக்கதை புரியும்.
  • படத்தில் ராக்கெட் கதை சொல்லும் விதம் புதுமையாக இருக்கும். ஒரு கதை அல்லது சம்பவம் என்று ராக்கெட் விவரிக்க ஆரம்பித்தால், கதையின் போக்கு எப்படி இருக்கும் என்று நம்மால் யூகிக்கவே முடியாது. எங்கோ ஆரம்பித்து எங்கோ சென்று விடும் கதை. ஒரு கதாபாத்திரத்தை பற்றி சொல்லும் போது அந்த கதாபாத்திரத்தில் வரலாறு, புவியல், மற்றும் பூகோளம் போன்ற அணைத்து விசயங்களும் புட்டு புட்டு வைக்க படும். உ.தா: போதை மருந்து விற்க படும் ஒரு அப்பார்ட்மெண்ட் அறையை காட்டி, போன தலைமுறையில் அந்த அறையில் யார் முதலில் தங்கி இருந்தார்கள், அவர்களிடம் இருந்து யார் யாருக்கு அந்த அறை கை மாறியது, தற்பொழுது அந்த அறையில் யார் உள்ளார்கள் என்று அணைத்து விசயங்களும் நமக்கு விளக்க படும்.
  • படத்தில் நிறைய வன்முறை காட்சிகள் மிகவும் தந்துருபமாக படமாக்க பட்டு இருக்கும். ஒரு காட்சிகளில் 10 வயது சிறுவன் ஒருவனிடம் லில்' ஜே துப்பாக்கியை குடுத்து வேறு ஒரு 8 வயது சிறுவனை கொல்ல சொல்லும் காட்சி நம்மை உலுக்கி விடும்..8 வயது சிறுவனின் கண்ணில் தெரியும் உயிர் பயம் மற்றும் 10 வயது சிறுவன் தான் கொலை செய்ய வேண்டுமா என்று கண்ணில் மிரட்சியும் பயமும் கலந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் காட்சி....யப்பா....கிரேட் ஆக்டிங் !!!
  • இறுதி காட்சி தான் படத்தின் அடிநாதமே. சினிமா தனம் இல்லாமல் மிகவும் எதார்த்தமான காட்சி அது.
  • இந்த படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்க பட்ட படம். படம் இறுதியில் நிஜ வாழ்வில் வாழ்ந்த கதாபாத்திரங்களின் படங்களை காட்டுவார்கள்.
இந்த படம் கட்டாயம் தவற விட கூடாத படம். கொஞ்சம் வன்முறை ஜாஸ்தி.அதீத வன்முறை காரணமாக இப்படம் 15+ வயதினற்கு மட்டுமே உகந்தது

Saturday, March 9, 2013

உலக சினிமா :- த வே ஹோம் (The way home)


'தொலைந்து போனவர்கள்' கவிதையை நான் எழுதிக்கொண்டிருந்தபோது வயதான கிராமத்து பாட்டிக்கும், நகரத்தில் பிறந்து வாழ்ந்த அல்ட்ரா மாடர்ன் பேரனுக்கும் உள்ள பாச பிணைப்பை கூறும் தென் கோரிய மொழி திரைப்படமான 'த வே ஹோம்' (The way home) பற்றி எழுத தோன்றியது. அதற்க்காக எனது குறுந்தகடு கருவூலத்திலிருந்து மறுபடி அத்திரை காவியத்தை காண நேர்ந்தது.
எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத.. கண்களில் குறைந்த பட்சம் ஒரு சொட்டு கண்ணீர் வரவழைக்கும் திரைப்படம் தான் 'தி வே ஹோம்'.

உலக திரைப்படங்கள் என கூறி கொண்டு நம்மவர்கள் 'சிவாஜி' என்றும் 'தசாவதாரம்' என்றும் கோடிகளை கொட்டி கமர்ஷியல் குப்பைகளை அளித்து கொண்டிருக்கும்வேளையில்..உலக அளவுக்கு திரைப்படம் எடுக்க சிறந்த திரைக்கதை போதும் என நிரூபிக்க வந்த படம். (படத்தின் கதை நடக்கும் இடம் தென் கொரியாவின் மிக பின் தங்கிய ஒரு கிராமம். நடிகர்கள் அனைவரும் புதுமுகங்கள்.) நம் ஊரில் இதே கதையை திரைப்படமாக எடுக்க ஒரு கோடி கூட தேவை இருக்காது.

முதல் காட்சி, தென் கொரியாவின் கடை கோடியில் இருக்கும் ஒரு கிராமத்துக்கு ரயிலிலும் பின்னர் ஒரு ஓய்ந்து போன ஊர்தியிலும் ஒரு அல்ட்ரா மாடர்ன் பெண்ணும் அவளை விட பல மடங்கான அல்ட்ரா மாடர்ன் சிறுவனும் செல்கின்றனர். அந்த கிராமத்தில் பஸ் நின்றதும் அந்த தாய்க்கும் சிறுவனுக்கும் சண்டை வருகிறது. அந்த சிறுவன், தன் தாயை எட்டி உதைக்கிறான். அதன் மூலம் அவன் எவ்வளவு குறும்புக்கார சிறுவன் என காண்பிக்க படுகிறது. அடுத்து அவர்கள் அந்த மலை கிராமத்தில் நடந்து சென்று ஒரு சிறு பாடவதியான வீட்டை அடைகிறார்கள். ஒரு சிறு அறை மட்டுமே இருக்கும் குடிசை வீடு அது. முகத்தின் வரிகள் மிகுந்து அவளின் வயதை சொல்கிறது பாட்டியின் முகம் . அவளுக்கு குறைந்தது ஒரு தொண்ணூறு வயது இருக்கலாம். தான் வேலை தேடி கொண்டிருப்பதாகவும் அதுவரை தன் பிள்ளை அந்த வாய் பேச முடியாத பாட்டியின் பராமரிப்பில் இருக்கவும் விட்டுவிட்டு அந்த தாய் கொரியா நகரத்திற்கு சென்று விடுகிறாள். பாட்டியை முதல் பார்வையிலேயே பிடிக்காமல் பொய் விடுகிறது சிறுவனுக்கு. பாட்டியின் உணவை உண்ணாமல் தான் கொண்டு வந்திருக்கும் டப்பா உணவுகளையே உண்ணுகிறான் அவன். எந்த நேரமும் வீடியோ கேம் இல் மூழ்கி இருக்கும் அவன்.. பாட்டியை கிறுக்கு என்றும் ஊமை என்றும் வீட்டு சுவரில் எழுதி வைக்கிறான். வயதான பாட்டி துணி தைக்க ஊசியில் நூலை கோர்த்து தர சொல்லி பேரனின் உதவியை நாடுகிறாள். மிகுந்த சலிப்பிற்கு இடையே அவன் கோர்த்து தருகிறான். தான் விளையாடிகொண்டிருந்த் வீடியோ கேம் இன் பாட்டரி தீர்ந்து போனதால், வேறு பாட்டரி வங்கி தரும்படி பாட்டியிடம் கேட்கிறான். பாட்டிக்கு புரியாததால் பைத்தியம் செவிடு என திட்டுகிறான்.

இதனிடையே ஒரு சிறுமி 'மாடு மாடு' என கத்த துரத்தி கொண்டு வரும் மாட்டிடம் இருந்து வழி மாறி ஓடி தப்பிக்கிறான் இன்னொரு சிறுவன். அந்த சிறுமியின் பால் ஈர்ப்பு வருகிறது நம் கதாநாயக சிறுவனுக்கு.அந்த சிறுமியை நன்பியாக்கி கொள்ள தன்னை அழகாக்கி கொள்ள, பாட்டியிடம் முடி வெட்டி விட சொல்கிறான். முடி வெட்டும் போது தூங்கி விடும் அவன், கண் விழித்து பார்க்கும் போது தலையை ஒட்ட வெட்டி விட்டுள்ளது கண்டு கலக்கம் கண்டு அழுகிறான். பாட்டியை திட்டுகிறான்.

கென்டக்கி ப்ரய்ட் சிக்கன் வேண்டும் என சைகையில் கேட்க மழைக்குள் அந்த தள்ளாத வயதில் மழையின் கீழ் நடந்து வந்து அவனுக்காக கோழி வாங்கி அவித்து தனக்கு தெரிந்த வரையில் சமைத்து கொடுக்க, அது கென்டக்கி ப்ரய்ட் சிக்கென் அல்ல என சாப்பிட மறுத்து விடுகிறான். பின்னரவில் பசி எடுக்க அதே சிச்கேனை சாப்பிட்டு பசி ஆருகிறான்.. பாட்டி தான் வளர்த்து வந்த செடியில் பறித்த காய்கறிகளை விற்க அருகில் இருக்கும் சந்தைக்கு பேரனையும் கூட்டிகொண்டு பஸ் இல் ஏறி செல்கிறாள். அங்கு அவனுக்கு காலணி வாங்கி தருகிறாள். அப்போது பேரன் இனிப்பு மிட்டாய் வங்கி தர சொல்கிறான். இருக்கிற பணம் எல்லாம் செலவு செய்து அவனுக்கு வாங்கி தந்து அவனை பஸ்ஸில் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறாள். பாட்டியின் கிராமத்துக்கு வந்து சேரும் பேரன்.. பாட்டியை காணாது பஸ் நிறுத்தத்திலேயே அமர்ந்து பாட்டி வரும் பஸ் நோக்கி காத்திருக்கிறான். எந்த பஸ்சிலும் வராது போன பாட்டி நடந்து வருவதை காண்கிறான். அப்போது தான் பஸ்சுக்கு காசு இல்லா விட்டாலும் இனிப்பு வாங்கி தந்த பாட்டி நடந்தே வந்த அன்பை எண்ணி உருகுகிறான். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக சண்டை போட்டபடியே பாட்டியிடம் அன்பு செலுத்த ஆரம்பிக்கிறான் பேரன்.

அவனுடைய அம்மா வந்து அவனை அழைத்து செல்லும் நாள் வருகிறது. பாட்டியை பிரிய மனமின்றி அவன் செல்லும் நாளின் முதல் நாள் இரவு.. பாட்டிக்கு ஏகப்பட்ட நூல்களில் ஊசிகள் கோர்த்து வைக்கிறான். பாட்டிக்காக தானே வாழ்த்து அட்டைகள் செய்து அதில் அனுப்புனர் பகுதயில் பாட்டி என்றும் பெறுனர் பகுதியில் அவன் பெயரை எழுதி ஒவ்வொரு மாதமும் தனக்கு அனுப்புமாறும் அப்போது அவள் நலமாக இருக்கிறாள் என தான் புரிந்துகொள்வேன் என்று கூறுகிறான். அவன் ஊருக்கு புறப்பட்டு செல்லும் நாளில் நம் மனம் கனக்க... பேரன் மன்னிப்பு கேட்டபடி பாட்டியை பிரிய...அந்த மலை கிராமத்தில் கூன் போட்டபடி குச்சியை வைத்து மெல்ல ஏறும் பாட்டியை காட்டியபடி படத்தை முடிக்கிறார்கள்.

ஒவ்வொரு காட்சியும் நம்மையே பிரதிபலிப்பது போல நகர்வது தான் இப்படத்தின் வெற்றி. படத்தை பார்க்கும் ஒவ்வொரு பேரனும் தனது தாத்தா பாட்டியை நிச்சயம் நினைத்து கொள்வான். இப்படத்தை இயக்கியவர் லீ ஜியாங் ஹயாந்க் (Lee Jeong-hyang) என்ற பெண் இயக்குனர்.2002 இல் சூப்பர் ஹிட்டான இத்திரைப்படம் உலகெங்கும் வாழும் பாட்டிகளுக்காக எடுக்கப்பட்டது. படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் ஜீடோங்க்மா என்ற குக்கிராமத்தில், அந்த கிராமத்தில் வாழும் மனிதர்களை கொண்டே எடுக்கப்பட்டது. அந்த பாட்டியும் அவ்விடத்தில் வாழ்ந்தவர் தான். பெரிய நடிகர்கள் இன்றி வெறும் பாட்டி பேரனின் பாசப்பிணைப்பையும் அவர்களுக்குள் ஏற்ப்படும் உறவு பாலமும் மட்டும் பேசுகிற படம் பெரும் வெற்றியும் பெற்றது. படத்தில் பெரும் ஒப்பாரி காட்சிகளோ சோக காட்சிகளோ இல்லாமல் இருந்தாலும்.. படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் ஒரு சொட்டு கண்ணீர் விடப்போவது நிஜம்.
 
-Review by Nila Mukilan